பருவமும் பயணமும்

MTech - Bangalore to Tirunelveli - MS University


அனுபவத்திலிருந்து ஒரு ஆயுத எழுத்து.......
                      முதுநிலைக் கல்வியின் முதற்படி......

முதல் பருவம்:
நான் வாரம் தோறும் வரும் வாரமலர் அல்ல. மாதத்திற்கு இருமுறை வரும் மாதப் பத்திரிக்கை

வகுப்பறையில் பக்கத்தில் இருப்பவர்கள் பார்வைக்கு புதிதாய் தெரிவார்கள். சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமாணவர்கள் எங்கையோ பார்த்த அனுபவத்தை தருவார்கள்.

வகுப்பறையில் வாத்தியார்களின் குரல் நான் இருக்கும் இருக்கைக்கு வருவதற்கு முன்னால் கரைந்து போவதும், என்னவென்று கேட்காமல் அடுத்தவரின் பெயருக்கு வருகைப் பதிவு கொடுப்பதும், கண்ணயர்ந்து கனவுகளை எண்ணி பார்ப்பதும், கிண்டலுடன் கூடஇருப்பவர்களை கோபப்படுத்துவதும் ஒரு மெகாத் தொடர் அனுபவம்.

உணவுக்காக ஐந்து, ஆறாவது வகுப்புகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஞாபகத்தை இந்த கல்லூரியில் என்னால் பெறமுடிந்தது.

தூரத்தில் தெரியும் Auto வின் மஞ்சள் கலருக்குள் எங்களின் மங்கிப்போன கண்களின் மதிய உணவு மல்யுத்தம் நிறைவடையும்.

பேருந்து நிலையக் கடையோரம் காலங்கடந்த டீ, ஓலைக்கடையில் காலைநேர உணவு, இரவு வீட்டில் இனிய உணவு என்று இன்பம் தந்த புதிய நினைவுகளும் உண்டு. வீடு முதல் கல்லூரி வரை என் நண்பன் பாரத் -தின் சொந்தக்காரில் இறுதி நேரத் தேர்வுகளில் இலவச பயணம். அவ்வப்போது திருநெல்வேலியில் இருக்கும் நண்பனின் அறையில் இலவச ஓய்வு.

நான் தளர்வுற்று தூங்கிய நேரத்தைக் காட்டிலும் என் செல்போன் தளர்ச்சியில் துங்கிய நாட்களே அதிகம்.

சிக்கனத் தேவைக்காக அவ்வப்போது இரயில் பணங்களும் சாத்தியம் தான். குறிஞ்சி பூக்கூட 12 ஆண்டுளுக்கு ஒரு முறை பூத்துவிடும். ஆனால் பெங்களூர் முதல் நாகர்கோவில் இரயில் என்பது கானல் நீர்தான்.

பயணம்....


பயண நேரத்தில் என்னுடன் பழக்கப்பட்டவர்கள் ஏராளம்.

சாலையோரம் பூத்திருக்கும் பூக்களை பறித்துவிட்டு பூவின் சுவடு இல்லாமல் செய்வது போல் என்னுடன் பயணத்தில் வந்தவர்களின் சுவடும் என் பயண நேர முடிவில் முடிந்துவிடும். பயண நேரத்தில் சந்தித்த பழைய நட்புகள் ஏராளம். என் இருக்கையை மாற்றிக் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை.

'பேருந்தில் எதையும் வாங்கி சாப்பிடாதே! யார் தந்தாலும் வாங்காதே' என்ற பாசம் கலந்த பக்குவ வார்த்தைகளை அம்மாவிடம் வாங்கி, அக்கம் பக்கத்தாரிடம் 'போய்விட்டு வருகிறேன்' என்ற பிரிவு வார்த்தைகளையும் வழங்கிவிட்டு வழிமேல் விழி வைத்து மனம் கனத்து நடந்த நாட்கள் ஏராளம்.

'உனக்கு பெங்களூர் நாகர்கோவிலுக்கும் திட்டுவிளைக்கும் உள்ள தூரம் தான்' என்று எரிச்சல் பட்டவர்களும் உண்டு. 'பார்த்து பத்திரமாகப் போய்ட்டு வா' என்று என்னை பார்த்து பரிதாபபட்டவர்களும் உண்டு.

இறுதி இருக்கையில் அமர்ந்து மூட்டைப்பூச்சியுடன் இரவு முழுக்க விளையாடி காலையில் கலைந்து சென்ற நினைவுகளும் என்னுள் வட்டமிட்டேக் கொண்டிருக்கின்றன.

'மழைக்காலம் வந்திடுச்சினா மறந்திடாதீங்க – அட
நம்மூர் பஸ்ல குடை இல்லாம ஏறிடாதீங்க' எனற பாடலை சின்ன வயதில் மேடையில் பாடிய ஞாபகம் எனக்கு. இப்பொழுதும் சத்தமாக பேருந்துக்குள் பாடி விடலாமா? என்று நனைந்து போன நாட்கள் ஏராளம்.

'திரைக்கடலோடி திரவியம் தேடு' என்று கூறுபவர்கள் கூட இடம் விட்டு இடம் சென்று படிப்பதை உற்சாகப்படுத்த மாட்டார்கள் போலும். அளவோடு உணவு, அசையாத இருக்கை, தண்ணீர் இல்லாத bottle என பேருந்து பயணங்களும் கடந்ததுண்டு.

வெள்ளி, சனி, ஞாயிறு என்றால் என் பயண நாட்களை நினைத்து நான் என்னையே தயாரித்துக் கொள்வேன். ஆடை முதல் அலங்கார பொருட்கள் வரை எடுத்து வைத்திருப்பேன். புத்தகங்கள் அவ்வப்போது என் பயண நேரத்தில் இடம் பெறும்.

பயண நேரத்தில் அதிகமாக சிரமப்பட்டது என் MP3 Player தான். எப்பொழுதும் என் காதின் ஓரத்தில் கரைந்துக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் அதுவாகவே ஓய்வை எடுத்துக் கொள்ளும் நான் ஓய்வு கொடுக்காமலே.

இவ்வுளவு தூரம் கடந்து வந்து படிக்கவேண்டுமா? என்ற எண்ணம் என்னைப் போன்று நெடுதூரம் பயணித்தவர்களின் பரவலானக் கருத்தாகத் தான் இருக்க முடியும்.

     பருவமும் பயணமும் தொடரும்.....

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)