என் இனிய வீடு. தன் எடையை விட 50 மடங்கு எடையை தூக்கும் எறும்பை போல தன் தகுதிக்கு மீறி எங்களை சுமந்த என் இனிய வீட்டுக்கு அர்ப்பணம். என் இனிய வீடு. 6 பேர் வாழ்ந்து 5 ஆகி இப்பொழுது 2 பேருடன் இனித்துக் கொண்டிருக்கும் இனிய வீடு. தலைசாய்க்க தாய்மடி காட்டி தெம்பூட்ட தந்தைதோள் கொடுத்து கண்ணீர் துடைத்து கவலை மறக்க கைகொடுத்த என் இனிய வீடு. ஓடு கூட்டில் ஓலமிட்டு ஓடும் மின்விசிறி....! பச்சை சுவருக்குள் பல் விழுந்த டுபுலைட்.....! தெருவில் புதைந்த படிக்கட்டு...! இருளுக்கு மணம்முடிக்கப் பட்ட சிறிய அறை.....! ஆணியில் உயிரை அடகுவைத்த அஜந்தா கடிகாரம்...! கண் இழந்த கண்ணாடி..! என்று இன்றும் பிரமிக்க வைக்கிறது. மழை துளிக்காக மடி காட்டி மதி ஒளிக்காக மேடையிட்டு துயில் எழும் போது துதி பாடி ஓன்றாக கலந்த ஓரவஞ்சனை இல்லாத ஒரு உயிர். பல வர்ணங்களில் பார்வையை பதித்த இந்த பகலவன் இன்று சற்று தலைமறைவாகி தலைசாய்க்கிறான். தன் உடையை மாற்றி நடையெடுக்க தயாராகிறான். பச்சை மணலுக்குள் பதியப்பட்டவன் - இன்று சுட்ட செங்கலுக்குள் சுடராகிறான். தாவாணிக்குள் தள்ளாடியவன் - இன்று முழு...